Friday, February 21, 2025

கீர்த்தனை 130 - பாவி இன்றே திரும்பாயோ?

கீர்த்தனை 130 - பாவி இன்றே திரும்பாயோ?



பாவி இன்றே திரும்பாயோ? நேச
ஆவியின் சத்தம் கேளாயோ?

மேவி தயை நிரம்பி ஏவி உனை விரும்பிக்
கூவி அழைக்கையிலே தாவி யேசுவை நோக்கி 

பாவி இன்றே திரும்பாயோ?

1.         பாவம் தொடர்ந்து செல்லுமே - பாவ
சாபம் அடர்ந்து கொல்லுமே - உனின்ப
லாபம் எல்லாமே சாபம் காலமிதுவே காலம்
தாபம் உளவுன் யேசு மா பரிதாபம் கண்டு 

பாவி இன்றே திரும்பாயோ?

2.         எத்தனை போதனை பெற்றாய் - ஐயையோ!
சுத்தமாய் சாதனை அற்றாய் - என்றாலும்
அத்தனை பாவத்தையும் முற்றுமாக வெறுத்து
அத்தனே தத்தம் செய்தேன் நித்தமும் காவுமென்று 

பாவி இன்றே திரும்பாயோ?

3.         கல்வாரியில் தொங்கினோர் யார்? - உனக்
கல்லோ நேசர் ஏங்கினார் பார்! - இன்னும்
பொல்லா மனதுடனே கல்போல் கடினமாகி
சொல்வோரையும் நிந்தித்து எல்லாக் கேட்டுக்குள்ளான 

பாவி இன்றே திரும்பாயோ?

4.         நிலையின்றலைகின்றோரே - ரத்த
விலை மதியாமல் சென்றோரே - போதும்
மலையாமல் (தயங்காமல்) யேசுவிடம் தொலையாத கவலை சொல்லி
உலையா (நீங்காத)  நம்பிக்கை வைத்து நிலையான ரட்சைபெற 

பாவி இன்றே திரும்பாயோ? நேச
ஆவியின் சத்தம் கேளாயோ?
பாவி இன்றே திரும்பாயோ?
**************************************************


Sunday, February 16, 2025

கீர்த்தனை 015 - சுய அதிகாரா சுந்தரக்குமாரா

கீர்த்தனை 015 - சுய அதிகாரா சுந்தரக்குமாரா




சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான
சுய அதிகாரா சுந்தரக் குமாரா

1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே
அதையொரு பம்பரம் போலிசைத்தனையே
துகில் போலாகாயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த 

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

2. நரர் பலர் கூடியொரு மனை முடிக்க
நாளெலாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மரமுயிர் தாது இன்னும் வான் புவி அனைத்தையும் ஓர்
வார்த்தையால் க்ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த 

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

3. கரை மதகற்ற குளம் புவியிலுண்டோ?
கடலுக்கவன் சொல்லன்றிக் கரைகளுண்டோ?
திரை திரையாக ஜலம் மலைபோல் குவிந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய்ப் பாதுகாக்கும் 

சுய அதிகாரா சுந்தரக் குமாரா

4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தாயே
பாவச்சுமை தோள் சுமந்து தீர்த்தாயே
சாமியுனைப் பற்றும் தேவ தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சுமனு கேட்டருள்வாய் 

சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான
சுய அதிகாரா சுந்தரக் குமாரா

*************************